தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினரை தவிர ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டனர்.
வலி. வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது, கடந்த 21ஆம் திகதி தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் மற்றும் வேலன் சுவாமி , வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் என ஐவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நீதிமன்றினால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்
அந்நிலையில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.
குறித்த சம்பவங்களை கண்டித்து , பொலிசாரின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து , வலி வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தவிர ஏனைய கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு சபை அமர்வில் கலந்து கொண்டனர்.
அதேவேளை கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் , தையிட்டியில் கட்டப்பட்டுள்ளது சட்டவிரோதமான கட்டடம் தான். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பேதமின்றி போராடுவது என்றால் நாமும் போராட்டத்தில் கலந்து கொள்வோம் என சபையில் கூறிய தேசிய மக்கள் சக்தியின் சபை அமர்வு முடிந்து மூன்றாம் நாள் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாது , காங்கேசன்துறை கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பொலிஸாருடன் இணைந்து சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையே , தையிட்டி விகாரை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் அடக்கு முறைகளை பிரயோகித்து , வலி. வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவரை கைது செய்திருந்தனர்.
போராட தாமும் வருவதாக உறுதி அளித்த தேசிய மக்கள் சக்தியினர் போராட்டத்தில் கலந்து கொள்ளாது காலை வாரி இருந்தாலும் , தமது சக உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டமைக்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments