கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்திருந்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்திடம் கூறியுள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த், வடக்கு மாகாண ஆளுநரை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன் போது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஸ்கானர் (Scanner) கருவிகளுக்காக, வடக்கு மாகாண மக்கள் சார்பில் உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மிகப் பொருத்தமான உதவி இதுவெ எனவும் ஆளுநர் கூறினார்
மேலும் ஆளூநர் கூறுகையில்,
வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் மிகுந்த வளமுடையவை. ஆனால், இவை எவ்விதப் பெறுமதிசேர் செயற்பாடுகளுமின்றி மூலப்பொருட்களாகவே இங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. வடக்கில் இவற்றைப்பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் இல்லை. போருக்கு முன்னர் இயங்கிய தொழிற்சாலைகளும் தற்போது இல்லை.
எனினும், தற்போதைய அரசாங்கம் இந்நிலையை மாற்றியமைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் மூன்று விசேட முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறைசார் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை வழங்கவுள்ளன.
அதேவேளை, 'த மனேஜ்மன்ட் க்ளப்' அமைப்பால் வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. இவை சாதகமான சமிக்ஞைகளாக அமைந்துள்ளன, என்றார்.
தொடர்ந்து காணி விவகாரம் குறித்துப் பேசிய ஆளுநர், கடந்த காலங்களில் மக்களின் வாழ்விட மற்றும் விவசாயக் காணிகள், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தன்னிச்சையாகப் பறிக்கப்பட்டன.
அவற்றை மீள மக்களுக்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்திருந்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் நம்புகின்றனர். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர்.
வடக்கு மாகாண இளையோரின் எதிர்காலம் குறித்து உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தபோது,
இன்றைய இளையோருக்கு இங்கு பல்வேறு வாய்ப்புகளும் வளங்களும் உள்ளபோதும், அவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளனர்.
இந்த எண்ணப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, இளையோரைப் பாதிக்கும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான செயற்றிட்டம் அரசாங்கத்தால் முழுவீச்சாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் இளையோரிடத்தில் நிச்சயம் மனமாற்றம் ஏற்படும், என ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், 'டித்வா' புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் இதன்போது விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.
இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.







No comments