பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறியவர்கள், தற்போது, நாட்டைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என்று கூறிவருகின்றனர். அதற்கு நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்கின்றமை கவலைக்குரியது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்று அண்மையில் நல்லூர் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கடுமையான எதிர்பிற்கு மத்தியில் தீர்மானம் ஒன்றினை இயற்றியமை தெரிந்த விடயம்
குறித்த தீர்மானத்தின் மூலம் அரசு புதிய சட்டத்தினை கொண்டுவராமல் விடப்போவதும் இல்லை அதே நேரம் பயங்கரவாதச் சட்டத்தினை நீக்கப்போவதுமில்லை. ஆனால் மக்களினை குரல்வளையை நசுக்குகின்ற இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக எமது மக்கள் சார்பில் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது எமக்கான கடமை.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரசார மேடைகளிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது அச் சட்டத்தினை விட கொடுமையான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை கொண்டு வருகின்றார்கள்.
இச் சட்டமூலம் பயங்காரவாத சட்டத்தினை விடக் கொடுமையானது என்பது நன்கு கற்றறிந்த சட்டத்தரணிகள் மற்று கல்விபுலன் சார்ந்தோர், ஆய்வாளர்களால் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்ட கருத்தரங்குகளில் மூலம் வெளிக்கொணரப்பட்டது.
அதை விட குறித்த சட்டமூலம் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் கவலை வெளியிட்டதுடன் ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியிருந்தனர். என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறிய இவ் அரசாங்கத்தினைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் அன்றைய சபை அமர்வின் போது நாட்டைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என்று கூறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தாங்கள் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் ஒரு கதையும் பின்னர் மறு கதையும் கதைப்பது தொடர்ச்சியாக இந் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஒரு சம்பவம்.
அந்தவகையில் நல்லூர் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் உட்டுகட்டுமான மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற நல்லூர் பிரதேச சபை எமது மக்களை ஒடுக்கும் முகமாக கொண்டு வருகின்ற இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பும் என தெரிவித்தார்.







No comments