தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் அமர்ந்திருந்த தம்பதியினரை இலக்கு வைத்து, கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியால் சுமார் 10 தடவைகள் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இதில் பிடிகல பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன:
கொல்லப்பட்ட சட்டத்தரணி, பிரபல பாதாள உலகக் குற்றவாளி 'கரன்தெனிய சுத்த' என்பவரின் வழக்குகளில் முன்னிலையாகி வந்தவர்.
தனது கட்சிக்காரரான கரன்தெனிய சுத்தவின் ரகசியத் தகவல்களை, அவரது எதிரியான 'லொகு பெட்டி' குழுவினருக்கு சட்டத்தரணி கசியவிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் துரோகத்தினால் ஆத்திரமடைந்த கரன்தெனிய சுத்தவின் நேரடித் திட்டமிடலிலேயே இந்த இரட்டைக்கொலை நடந்திருக்கலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் கருதுகின்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்:
இத்தகைய தாக்குதல்கள் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும்.
குற்றவாளிகளைத் தாமதமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.







No comments