முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்,
வடக்கில் கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர்.
எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 'ஹிமிகம' (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.
அத்துடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒற்றைச் சாளர முறைமையை உருவாக்குதல், தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல், மற்றும் பசுமைக் காலநிலை நிதி போன்ற சர்வதேச நிதியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஐ.நா.வின் ஒத்துழைப்புக்கள் மாகாணத்துக்கு அவசியம் என ஆளுநர் தெரிவித்தார்,
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்,
பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதியீட்டல் முறைகள் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஐ.நா. தயாராகவுள்ளது.
அத்துடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகளை வடக்கிற்கு ஈர்ப்பதற்குத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
அதன் போது முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக உள்ள கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்களை தொடர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியனவற்றுடன் தொடர்புடையதாக மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகச் சுட்டிக்காட்டினர்.
அதேபோல, கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும், தமது மாவட்டத்தில் நிலவும் பல்வேறுபட்ட காணிப் பிணக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இறுதியாகக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர்,
மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் கையாளப்பட வேண்டியுள்ளதைக் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், மாவட்டச் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்










No comments