Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது


யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் மந்திரிமனை அழியும் அபாயத்தில் உள்ளது. அதன் ஒரு பகுதி கடந்த மழைக்கு இடிந்து விழுந்துள்ளது. அதன் அருகில் வசிப்பவன் என்ற வகையில் எனக்கு அது தொடர்பாக அக்கறை உள்ளது. கடந்த காலத்திலிருந்து பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் சாத்தியப்படவில்லை.

அது ஒரு நம்பிக்கை பொறுப்பாளர்களின் சொத்தாக இருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் விரைவாக கவனத்தில் எடுக்க வேண்டும். நம்பிக்கை பொறுப்பாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தோ அல்லது தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்தோ இவற்றை செயல்படுத்த வேண்டும். நிதி சம்பந்தமான விடயங்களுக்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

நல்லூர் மந்திரிமனையை நம்பிக்கை பொறுப்பாளர் புனரமைப்பு செய்வது என்று சொன்னால், ஏற்கனவே நிதி இல்லை என்று தெரிவித்தார்கள். அதற்கு செலவில்லாமல் நாங்கள் நிதி உதவி செய்வதாக உறுதியளிக்கிறோம். அந்த முடிவுக்கு அவர்கள் வரவேண்டும். இல்லையென்றால் தொல்லியல் திணைக்களம் பொறுப்பு எடுத்து செய்வதற்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

 அந்த அங்கீகாரத்தின் ஊடாக திணைக்களத்துடன் நாங்கள் ஒரு சிறிய ஒரு அமைப்பை உருவாக்கி நிதியை பெற்று இந்த வேலையை உடனடியாக செய்ய முடியும். ஆகக் கூடியது இரண்டு கிழமைக்குள் இதனை நிறைவேற்றுவதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

நல்லூர் மந்திரிமனையை இவ்வாறு விடுவது முழுமையாக அழிய விடுவது தான் நோக்கமா என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.

அதற்கு அருகில் இருப்பதால் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு.

யாழ்ப்பாண தமிழ் மன்னரின் ஒரே ஒரு வரலாற்றுச் சின்னம் அழிவடைந்து போவதை ஏற்க முடியாது. 

அதற்கான அக்கறையோடு கடந்த காலத்திலிருந்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும்  இரண்டு சாரார்களும் ஒவ்வொரு தடையை போட்டு வந்திருக்கிறார்கள். நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. தற்போது இந்த விடயம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது சாரரும் தங்கள் பதிலை இரண்டு கிழமைக்குள் வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

No comments