யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற பங்குனி திங்கள் உற்சவத்தின் போது பக்தர்கள் கூட்ட நெரிசலில் பெண்ணொருவரின் தாலிக்கொடி களவாடப்பட்டிருந்தது.
அது தொடர்பில் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சோதனை செய்து தாலிக்கொடி அறுத்த 58 வயதான பெண்ணை பொலிஸார் அடையாளம் கண்டு , அவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பெண் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆலயத்திற்கு காரில் வருகை தந்த நிலையில் அவரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
அதன் போது அவருடன் காரில் வந்த ஏனைய இருவரையும் கைது செய்ததுடன் காரினையும் மீட்டு , பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் களவாடிய தாலிக்கொடியை தான் கிளிநொச்சி பகுதியில் உள்ள தாம் வழிபாட்டிற்கு செல்லும் ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் தாலிக்கொடியை மீட்டு வந்துள்ளனர் .
கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






.jpeg)
.jpeg)
.jpeg)



No comments