"மக்களின் காணி மக்களுக்கே .. " என்ற எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையில் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் பெருமளவான காணிகளை விடுவிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
தையிட்டி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணிகள் மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்ட வருகின்றோம்.
குறிப்பாக தற்போது மயிலிட்டி பகுதியில் , கீரிமலை - பருத்தித்துறை வீதியின் கடற்கரை பக்கமாக உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அவற்றை விடுவிப்போம்.
அதுபோன்று , மயிலிட்டி காணிக்கை மாதா கோவில் , அப்பகுதியில் உள்ள இடுகாடு மற்றும் பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியை சூழவுள்ள பகுதிகள் என்பவற்றையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விடுவிப்பு மதத்தோட தொடர்புடையது என்பதால், அதனை நிதானமாக கையாளாக வேண்டிய தேவையுள்ளது. அதற்காக தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைக்கு கொடுக்கும் எண்ணம் எமது அரசாங்கத்திற்கு இல்லை என்பதனை ஆணித்தரமாக கூறுகிறேன்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதனிடையில் வடக்கில் தோல்வி கண்ட சில அரசியல்வாதிகள், அதனை குழப்பும் முகமாக செய்யப்படுவதுடன் , தெற்கில் உள்ள இனவாத அரசியல்வாதிகளுக்கு, தீனி போடும் வேலைகளையும் செய்கின்றனர். வடக்கில் உள்ளவர்கள் தையிட்டி விகாரை பிரச்சனையை அரசியலாக்காமல் விட்டால் ,விரைவில் அக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.









No comments