“முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும் இணைந்து போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்திருந்தது.
யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி, வைத்தியசாலை வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு போதைப்பொருளற்ற சமூகத்திற்கான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.
குறித்த பேரணியில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மாநகர சபை உறுப்பினர் சு,கபிலன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்
பேரணியின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்தொழில் அமைச்சர்,
போதைப்பொருள் என்பது தனிநபரின் வாழ்வை மட்டுமல்லாது, குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையே சீரழிக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக எமது இளம் சந்ததியினரை இந்த ஆபத்திலிருந்து பாதுகாப்பது காலத்தின் அவசியமாகியுள்ளது.
அதனால், விழிப்புணர்வு மட்டுமன்றி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பு வாயிலாக இளைஞர்களை நேர்மறை பாதையில் முன்னேற்றுவது அனைவரின் பொறுப்பாகும். இன்றைய இளைஞர்கள் நல்ல மாற்றத்திற்கான சக்தியாக உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
போதைப்பொருளற்ற, ஒழுக்கமிக்க, ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என மேலும் தெரிவித்தார்.














No comments