அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருதை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச் சமூகங்களையும் ஆதரித்து, நாட்டை நிர்வகித்து வரும் அநுரகுமார திஸாநாயக்கவைப் பாராட்டும் வகையில் அவருக்கு இந்தக் கௌரவத்தைக் கம்பன் கழகத்தினர் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா - 2026இன் இறுதி நாள் வைபவம் கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கம்பன் கழகம் ஆறு சான்றோர்களுக்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி.தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி.உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்தியர் 'காப்பியக்கோ' ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான 'கம்பன் புகழ்' விருதை இவ்வாண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு "வரலாற்றை மாற்றியவன்!" என்ற புகழாரத்தோடு கழகத்தினர் வழங்கிக் கௌரவித்தனர்.















No comments