ஐந்தாண்டு கால பகுதிக்குள் 13ஆயிரத்து 600 தாதியர்களை சேவையில் இணைப்பதை இலக்காக கொண்டு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 14 மாதங்களில் மட்டும் நாங்கள் சுமார் 5,000 தாதியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம். ஆனால், எல்லா இடங்களிலிருந்தும் வரும் ஒரே முறைப்பாடு என்னவென்றால், 'தாதியர்கள் போதுமானதாக இல்லை' என்பதுதான்.
நாங்கள் அவர்களை எங்களது அமைச்சிலோ அல்லது வீடுகளிலோ வைத்திருக்கவில்லை; அனைவரையும் வைத்தியசாலைகளுக்கே அனுப்பியுள்ளோம்.
ஆனால், கடந்த கோவிட் நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, பெருமளவிலான தாதியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் எங்களது உத்தியோகத்தர் பட்டியலில் இருந்தாலும், தற்போது பணியில் இல்லை. இதுவே பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். 5,000 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தும் அது போதுமானதாக இல்லை.
இருப்பினும், இந்த அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,900 புதிய தாதியர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளோம். வரும் 2030 ஆம் ஆண்டிற்குள், இந்த ஐந்து வருட காலப்பகுதியில் பட்டதாரிகளுடன் சேர்த்து மொத்தம் 13,600 தாதியர்களை வேலைக்கு அமர்த்துவதே எங்களின் இலக்காகும்.
நீங்கள் மாகாண சபையிடமோ அல்லது எங்களிடமோ கூடுதல் தாதியர்களை கேட்கும் போது, அவர்களுக்கு நாம் பயிற்சி அளிக்க வேண்டும்.
தற்போது தாதியர் பயிற்சிப் பள்ளிகளில் (NTS) மாணவர்களைச் சேர்க்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். இந்த மாதத்தில் மட்டும் 3,000 மாணவர்களைச் சேர்ப்பதற்கான வர்த்தமானி (Gazette) வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் 2030 இல் பயிற்சியை முடித்து வெளிவருவார்கள்.
அதேபோல், இந்த ஆண்டில் மத்திய அமைச்சின் கீழ் 1,989 கீழ் நிலை ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளோம். இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இது தவிர ஏனைய துணை மருத்துவப் பணியாளர்களையும் (Paramedicals) இணைத்துக் கொள்ள உள்ளோம். சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு 2 முதல் 5 வருடங்கள் வரை பயிற்சி அளித்த பின்னரே சேவையில் ஈடுபடுத்த முடியும் என்பதுதான் இதில் உள்ள முக்கிய சவாலாகும் என தெரிவித்தார்.









No comments