Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மண்டைதீவு படுகொலை - முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிக்க உத்தரவு


மண்டைதீவு படுகொலை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் , நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. 

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில் , குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , சடலங்கள் காணப்படுவதாக கூறப்படும் பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கிணறு அமைந்துள்ள காணி உரித்து தொடர்பில் உறுதி செய்து அதன் அறிக்கை பெறப்பட வேண்டும். 

மண்டைதீவு கிராம சேவகர் , வேலணை பிரதேச செயலகம் , வேலணை பிரதேச சபை, பாதிக்கப்பட்டோர் , சட்ட வைத்திய அதிகாரி , பொலிஸார் , கிராமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்றினை அமைத்து கலந்துரையாடல் நடாத்த ஆவண செய்யுமாறு மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதேவேளை முறைப்பாட்டாளரின் மகனின் சடலம் மண்டைதீவில் உள்ள பிரிதொரு கிணற்றில் மீட்கப்பட்டு விட்டதாகவும் , அதனை முறைப்பாட்டாளரே அடையாளம் காட்டி , சடலத்தை பெற்றுக்கொண்டதாகவும் , அதற்காக அந்த கால பகுதியில் 25ஆயிரம் ரூபாய் பணம் இழப்பீட்டு தொகையாக பெற்றுக்கொண்டார் என மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர். 

அதனை அடுத்து, முறைப்பாட்டாளரின் முறைப்பாடு தொடர்பிலான உண்மை தன்மையை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பிலான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதவான் வழக்கினை , எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு நீதவான் திகதியிட்டார்.

பின்னணி 

  1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள்  மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள  கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

No comments