யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த 05 பேர் கொண்ட கும்பல் அவ்விடத்தில் நின்ற இளைஞனை காரில் நாவற்குழி பகுதிக்கு கடத்தி சென்று , ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி , கூரிய ஆயுதங்களால் தாக்கிய பின்னர் , மீண்டும் இளைஞனை காரில் கொண்டு வந்து , பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் இரத்த காயங்களுடன் வீசி விட்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை சற்று தொலைவில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அதனை அவதானித்து , தப்பி சென்ற காரை மடக்கி பிடித்துள்ளனர்.
அதன் போது காரினுள் ஐவர் காணப்பட்டுள்ளதுடன் , இரண்டு கூரிய வாள்கள் , இரத்தக்கறை தேய்ந்த ரி சேர்ட் , மற்றும் 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர். அத்துடன் காரினுள் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து காரினுள் பயணித்த ஐவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை சித்திரவதைக்கு உள்ளான நிலையில் , குறித்த கும்பலால் வீதியில் வீசப்பட்ட இளைஞனையும் மீட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















No comments