யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நேற்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் பொலிஸார் கடுமையான பலப்பிரயோகத்தை மேற்கொண்டு, மாவட்ட செயலக வளாகத்தில் இருந்து இழுத்து வெளியேற்றினர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் வெளியிட்ட நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
யாழ் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்/ தாய்மார் ஆகியோரை பொலிசார் மிக மோசமாக தாக்கி அப்புறப்படுத்தியதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேபோல் இந்த நிகழ்வுகளை உள்ளேயிருந்து தனது கையடக்கத் தொலைபேசியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நீதி(?) அமைச்சரின் செயற்பாட்டையும், இந்த சம்பவத்தை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களை பொது வெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரனின் செயலையும் கண்டிக்கிறோம் - என்றுள்ளது.









No comments