யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடைபெறும் சிறப்பு தொல்லியல் கண்காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்தைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை கருதப்படுகிறது. 1980களில் பேராசிரியர் க. இந்திரபாலா, கலாநிதி இ. ரகுபதி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளும், 2024ஆம் ஆண்டு வாழ்நாள் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இப்பகுதியின் தொன்மை, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னைய அகழாய்வுகளில் கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், உருக்குச் சான்றுகள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், முத்துக்கள், விலங்கு எலும்புகள், சங்கு ஓடுகள் உள்ளிட்ட பல அரிய தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், தமிழ்-பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட "கோவேத" முத்திரை வட இலங்கையின் ஆரம்ப அரசியல் அமைப்பும் எழுத்தறிவும் தொடர்பான அரிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
இந்த அரிய தொல்லியல் பொருட்கள் அனைத்தும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.













No comments