Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். குளங்களை புனரமைக்கும் பணிகள் துரிதகெதியில்


யாழ்ப்பாணத்தில் பருவ மழைக்கு முதல் குளங்களை புனரமைக்கும் பணிகள் துரித கெதியில் இடம்பெற்று வரும் நிலையில், வடமாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டுள்ளனர் 

புத்தூர்–மீசாலை வீதியில் கிறீன் லேயர் அமைப்பால் புதிய குளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர், அதன் முன்னேற்றம் தொடர்பில் அமைப்பின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.

புதிய குளம் அமைக்கும் பணிகள் மழை ஆரம்பிக்கும் வரையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் அடுத்த ஆண்டு இரண்டாம் கட்டமாக எஞ்சிய பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிறீன் லேயர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து, கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகளையும் ஆளுநர் நேரில் பார்வையிட்டார். 

அங்கு துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றத்தை அவர் அவதானித்ததுடன், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு விளக்கமளித்தார்.

கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், அதன் மூலம் தற்போதைய கொள்ளளவை விட 25 சதவீதம் மேலதிகமாக நீரைத் தேக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர், உடுவில் குளத்தையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். கமநல சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான இக்குளத்தை எதிர்காலத்தில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு கையளிப்பதன் மூலம் தூர்வாரல் பணிகளை முன்னெடுக்க முடியும் என வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.

இக்குளங்கள் மற்றும் புதிய குளம் அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்காலத் தேவைகளை கருத்திற்கொண்டு திட்டமிட்ட முறையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம், நீர்வளங்களைச் சிறப்பாகப் பாதுகாத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஆளுநரின் இக்களப்பயணத்தின்போது ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், வலி.கிழக்கு பிரதேச செயலாளர், யாழ்ப்பாணப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், வலி.கிழக்கு மற்றும் வலி. தெற்கு பிரதேச சபைகளின்  தவிசாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும்  பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்









No comments