வடக்கு மாகாணத்தில் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு கைகொடுத்து பாதுகாப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைக்கான வலிமை (திவியட்ட சவிய) வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வாழ்க்கைக்கான வலிமை (திவியட்ட சவிய) வீட்டுத்திட்டம், பெற்றோரை இழந்த, ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பெண் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்
வடக்கு மாகாணத்தில் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் உள்ளனர். அவர்களில் சிலர் தாய் அல்லது தந்தையை இழந்தவர்களாகவும், சிலர் இருவரையும் இழந்தவர்களாகவும், மேலும் சிலர் குடும்ப ஆதரவின்றி வாழ்கின்றனர்.
இவ்வாறான குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்களை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு கைகொடுத்து பாதுகாப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது.
அதன் அடிப்படையில், “திவியட்ட சவிய” வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்காக அரசாங்கத்தினால் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது கட்டம் கட்டமாக வழங்கப்படும்
பயனாளிகள் தமது வீடமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பித்து, இயன்றளவு இந்த வருடத்திற்குள் அவற்றை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
வீடமைப்புக்குத் தேவையான மணலை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயனாளிகள் தமது பிரதேச செயலகத்தின் ஊடாக உரிய அனுமதியைப் பெற்று மணலை பெற்றுக்கொள்ள முடியும்
அத்துடன் பயனாளிகள் தமது வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்காக ஏனைய அரசாங்க உதவித் திட்டங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்
அதேவேளை ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதில் அந்தந்தப் பிரதேச மக்களினதும் சமூக அமைப்புகளினதும் ஒத்துழைப்பு முக்கியமானது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.









No comments