Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சென்னை - யாழ்ப்பாணம் போக்குவரத்தைப் பயன்படுத்தி சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஆளுநர் அழைப்பு


சுற்றுலாவிகளின் வருகை அதிகரிப்பதுடன், வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரமும் வருமானமும் உயர வேண்டும். இதுவே சுற்றுலாத்துறை வளர்ச்சியின் உண்மையான பயனாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 'இந்திய – இலங்கை சுற்றுலா இணைப்பு' என்ற தொனிப்பொருளிலான சுற்றுலாத்துறை வர்த்தகச் சந்திப்பு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது உரையில், 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மொழி, மதம், பண்பாடு, குடும்ப உறவுகள் மற்றும் வரலாறு சார்ந்த தொடர்புகள் பல நூற்றாண்டுகளாக நிலவுகிறது.

 இந்தத் தொன்மையான உறவுகளைச் சுற்றுலாத்துறையின் ஊடாகப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுவதற்கான காலம் இதுவாகும்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம், செல்வச்சந்நிதி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், தீவுகளுக்கான பயணங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு வகைகளை ஒருங்கிணைத்து, இந்தியச் சுற்றுலாவிகளைக் கவரக்கூடிய சிறப்பான சுற்றுலாப் பொதிகளை உருவாக்க முடியும் 

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தையும், நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கடல் போக்குவரத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, இந்தியச் சுற்றுலாவிகள் வடக்கு மாகாணத்தில் பல நாள்கள் தங்கிச் சுற்றிப்பார்க்கக்கூடிய பயணத் திட்டங்களை உருவாக்க வேண்டும்

இந்தியாவில் எந்த வகையான சுற்றுலாப் பொதிகளுக்கு வரவேற்பு உள்ளது, சுற்றுலாவிகள் எத்தனை நாள்கள் தங்க விரும்புகின்றனர், போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் வழிகாட்டல் சேவைகளை எவ்வாறு சிறப்பாக ஒருங்கிணைக்கலாம் என்பன தொடர்பில் இந்தியப் பிரதிநிதிகளின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றனர்

கலந்துரையாடல்களுடன் மட்டும் நின்றுவிடாமல், நடைமுறைக்கு ஏற்ற சுற்றுலாப் பொதிகளை உருவாக்குதல், அவற்றைச் சந்தைப்படுத்துதல் மற்றும் இந்தியச் சுற்றுலா முகமைகளுக்கும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைத் தொழில் முயற்சியாளர்களுக்கும் இடையில் நேரடி வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் துணைத் தூதுவரும் அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், கலாசாரம் மற்றும் தகவல் பிரிவுகளுக்குப் பொறுப்பானவரும் தூதரக அலுவலகத் தலைவருமான ஸ்ரீ சங்கரன் ராஜகோபாலன், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், தென்தமிழக சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், இந்தியச் சுற்றுலாத்துறைப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறைத் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.






No comments