யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி வலி. வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் , விடுவிக்கப்பட சாத்தியமான காணிகள் தொடர்பிலான விபரங்களை வரைபடங்களுடன் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சியாளர்களோடு பேசி, வலி. வடக்கில் எந்தெந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறி, வரைபடம் கொடுத்தோம். வரைபடம் கொடுத்து அது தொடர்பில் இராணுவத்தோடு பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு இணக்கப்பாடு வந்தது.
அந்த நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், எங்களால் தொடர முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு நாங்கள் அதை கையாளலாம் என்றிருந்தோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு நாடாளுமன்றம் செல்ல முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் தற்போதைய ஜனாதிபதிக்கு வலி. வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பிலான விபரங்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளேன். விடுவிக்கப்பட கூடிய காணிகள் தொடர்பிலான வரைபடங்களையும் அனுப்பியுள்ளேன்.
அதில் குறிப்பாக பலாலி கிழக்கு பகுதியை விடுவிப்பதன் ஊடாக அப்பகுதி மக்கள் மீள் குடியேறவும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியும் . அதேபோன்று கீரிமலை - காங்கேசன்துறை இடையிலான , 1500 மீற்றர் நீளமான பொன்னாலை - பருத்தித்துறை வீதியை விடுவிக்க வேண்டும்
அடுத்ததாக வசாவிளான் கிழக்கில் சுமார் 45 குடும்பங்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் உள்ளது. முகாமை மாற்றி அமைத்தான் ஊடாக அந்த காணிகளை மக்களிடம் கையளிக்க முடியும்.
அதேபோன்று மயிலிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் 137 ஏக்கர் காணிகளை விடுவிக்க கூடிய நிலையில் ஏறக்குறைய 5 ஏக்கர் காணியே விடுக்கப்பட்டுள்ளது
மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை விடுக்கப்பட்டுள்ள போதிலும் , அதன் மைதானம் விடுவிக்கப்படவில்லை. அதே போன்று மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம் , கிறிஸ்தவ மக்களின் சேமக்காலை , பிள்ளையார் ஆலயம் , ஐஸ் உற்பத்தி நிலையம் என்பவை விடுவிக்க வேண்டும்.
அத்துடன் பலாலி தெற்கில் உள்ள தோலகட்டி பழச்சாறு தொழிற்சாலை , வேலுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு சொந்தமான காணிகள் விடுவிக்க வேண்டும்
அதேபோன்று பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கான சுமார் 400 மீற்றர் நீளமான பாதையை விடுவிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன்.
எனவே அது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து காணி விடுவிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.









No comments