ஸ்ரீதர் தியட்டரை தொடர்ந்து, ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்திலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் முந்தைய காலத்தில் ஸ்ரீதர் திரையரங்கு இயங்கிய கட்டடத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில், நேற்றைய தினம் திங்கட்கிழமை குற்ற புலனாய்வு பிரிவினர், நீதிமன்ற அனுமதியுடன் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்
இந்நிலையில் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2001ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் , பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் மீள கையளிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணைகளும் நடைபெற்று வரும் நிலையிலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவிற்கு வேலை வாய்ப்பு வழங்கியமை தொடர்பிலும் அண்மையில் டக்ளஸ் தேவானதாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலத்தை பெற்றிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்திலும், ஊர்காவற்துறை அலுவலகத்திலும் குற்றப்புலனாய்வு துறையினர் சோதனையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments