Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை - பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி


சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.   

பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ. யோதிலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை தனது 70ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,  கடந்த வியாழக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சுமார் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது புகழுடலுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் , சமூக செயற்பாட்டளர்கள் , பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில், குப்பிழான் தெற்கு, வீரமனை பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெறும்.

 அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

ரமணி எனப்படும் யோதிலிங்கம்.

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பிறந்த சி.அ. யோதிலிங்கம், தொழில் நிமித்தம் நீண்டகாலம் கொழும்பில் வசித்ததுடன், பின்னர் உரும்பிராயிலும் வசித்து வந்தார். 

அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியியலாளர் எனப் பல்துறை ஆற்றல்களைக் கொண்டிருந்த அவர், அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

1970ஆம் ஆண்டு அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்கெடுத்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சூழலிலும், ஈழத்து அரசியல் களத்திலும் ரமணி எனும் பெயரில் தீவிரமாக இயங்கி வந்தார்.

தமிழர் தேசத்தின் அரசியல் விடுதலைக்காக தனது 16ஆவது வயதிலேயே செயற்படத் தொடங்கிய அவர், வாழ்வின் இறுதி வரை கொள்கை மாறாது உறுதியுடன் பயணித்தார். தமிழ்த்தேசிய அரசியல் வெளியில் தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தையும் உருவாக்கினார்.

ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்த்தேசியம் தொடர்பான பல தசாப்தகால ஆய்வுகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், பல முக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மலையக மக்கள் தொடர்பான கொள்கை விவாதங்களை முன்னெடுத்ததுடன், மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.









No comments