தியாக தீபத்தினுடைய சிலை அகற்றம் என்பது தமிழ் மக்களுடைய மனங்களை மட்டும் புண்படுத்தவில்லை, இந்த மண்ணிலே வாழ்கின்ற சிங்கள மக்களுடைய மனங்களிலும் அது வடுவை ஏற்படுத்தியிருக்கின்றது என தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக செயற்பாட்டாளர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் தியாக தீபத்தின் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வரதராஜன் பார்த்தீபனிடம் பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர்
பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
விசாரணைகளின் போது நல்லூர் பகுதியிலே பிரதான தூபியிலே வைக்கப்பட்ட சிலை தொடர்பான விவரத்தைக் கேட்டிருந்தார்கள்.
நாங்கள் அதற்கு தெளிவாக ஒரு விடயத்தைச் சொன்னோம்; அந்த சிலைகள் நிறுவப்பட்டது தொடர்பிலே எங்களுக்குத் தெரியாது என்றும், இந்த சிலைகள் நிறுவப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் அந்த இடத்தில் நிற்கவில்லை என்றும்,
அடுத்ததாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, தியாகதீபம் திலீபனின் ஆவணக் காப்பகம் தொடர்பாக.
அதற்கு தெளிவாக ஒரு விடயத்தை நான் சொல்லியிருந்தேன்; 2023 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான இந்த நான்கு வருடமாக தியாகதீபம் திலீபனின் ஆவணக் காப்பகமானது உரிய முறைப்படி அனுமதிகளைப் பெற்று நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என கூறினேன்
அடுத்த கேள்வியாக , அந்த திலீபன் ஆவணக் காப்பகத்துக்கான நிதி எவ்வாறு பெறப்படுகின்றது என்று கேட்டிருந்தார்கள்.
அதற்கு, 2023 ஆம் ஆண்டிலிருந்து தியாகதீபம் திலீபன் ஆவணக் காப்பகத்துக்கு நிதியினை எந்தவொரு வெளிநாடுகளில் இருந்தும் நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய சொந்தப் பணத்திலும், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் சொந்தப் பணத்திலும் தான் இந்த தியாகதீபம் திலீபன் ஆவணக் காப்பகமானது காட்சியகத்தை நாங்கள் நடத்தி வருகின்றோம் என கூறினேன்.
அடுத்ததாக ஒரு விடயத்தைக் கேட்டார்கள்; இந்த 'சிலை அகற்றப்பட்டது தொடர்பிலே உங்களுடைய கருத்து என்ன?' என
நான் தெளிவாக ஒரு விடயத்தைச் சொல்லியிருந்தேன்; இந்த சிலையானது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது என்பது பொலிஸார் செய்த மிக மோசமான செயலாகும்.
இந்த இடத்திலே அமையப்பெற்றிருந்த தியாகதீபம் திலீபனின் ஆவணக் காப்பகத்திற்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் வருகை தருவார்கள். அவர்கள் திலீபன் அண்ணாவினுடைய பாதத்திலே பூக்களை போட்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
அந்த சிங்கள மக்கள் என்னிடம் வைத்த மிக முக்கியமான கோரிக்கை: 'தியாகதீபம் திலீபன் அவர்களுடைய இந்த வாழ்க்கை வரலாறு, தமிழில் இருக்கின்றது. அதனை சிங்கள மொழியிலும் வையுங்கள் என
ஆகவே தியாகதீபத்தினுடைய சிலை அகற்றம் என்பது தமிழ் மக்களுடைய மனங்களை மட்டும் புண்படுத்தவில்லை, இந்த மண்ணிலே வாழ்கின்ற சிங்கள மக்களுடைய மனங்களிலும் அது வடுவை ஏற்படுத்தியிருக்கின்றது.
தியாகதீபம் திலீபன் இன, மத, மொழி கடந்து எல்லா மக்களும் தியாகியாக போற்றி வருகின்ற நிலையில் பொலிஸார் சிலையை அகற்றியமை அது தமிழ் மக்களுடைய மனங்களில் மட்டுமல்ல, எல்லா இன மக்களுடைய மனங்களிலும் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே சிலையை பொலிஸார் அகற்றியது என்பது ஒரு மிகவும் மனவருத்தத்திற்குரிய செயல் என்பதை நாங்கள் தெளிவாக பொலிசாரின் விசாரணைகளில் கூறியிருந்தோம் என தெரிவித்தார்.









No comments