யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
முன்னதாக தமிழர் பாரம்பரியத்தையும் கலை மரபுகளையும் பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன், மாவட்டச் செயலக நுழைவாயிலிருந்து தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தை வந்ததடைந்தது.
கேட்போர் கூடத்தில், அரங்க நிகழ்வுகள் நாடகச் சக்கரவர்த்தி பரஞ்சோதி பரராஜசிங்கம் (பாப்பா) அவர்களின் கலைப்பணிகளை நினைவுறுத்தி அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நடைபெற்றன.
அரங்க நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் , கோலாட்ம் காலிங்க நர்த்தனம் ஆகியவை இடம்பெற்றதை தொடர்ந்து, பலாலி ஆசிரியர் கலாசாலை ஓய்வுநிலை அதிபரும் சாகித்திய ரத்னா கவிஞர் சோ.பத்மநாதனுக்கு (சோ. ப) கெளரவிப்பு நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் நாட்டார் வழக்காறுகளையும் சமூக அறிவியல் நோக்கிலான ஆய்வுகளையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணம் - 05 – நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நூலின் உள்ளடக்கம் மற்றும் ஆய்வுப் பெறுமதிகள் தொடர்பான ஆய்வுரையை முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து, பாரம்பரிய கூத்திசைப் பாடல்கள், வீரம் குழுநடனம், கரகாட்டம் என்பன இடம்பெற்று, பிரதேச செயலக ரீதியாக மூத்த கலைஞர்களுக்கு "யாழ்முத்து" மற்றும் இளைஞர்களுக்கு "இளங்கலைஞர்" விருதுகள் வழங்கி வழங்கப்பட்டன.
அத்துடன் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட மட்டப் போட்டிகளில் கிராமியப்பாடல், இசை நாடகம், கும்மி நடனம், விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் கையெழுத்துச் சஞ்சிகை ஆகிய பிரிவுகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வுநிலை செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.
கடற்றொழில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் தர்சினி நிதர்சன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக பலாலி ஆசிரியர் கலாசாலை ஓய்வுநிலை அதிபரும் சாகித்திய ரத்னா கவிஞர் சோ.பத்மநாதன், யாழ்ப்பாண மாவட்ட ஓய்வுநிலை சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




















No comments