Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். பேருந்து நிலைய மலசலகூடப் பராமரிப்பை இ.போ.ச.விடம் ஒப்படைக்கப் பரிசீலனை!


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தினுள் உள்ள பொது மலசல கூடத்தினை பராமரித்து , தொடர்ந்து இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபையினரிடமே ஒப்படைப்பது தொடர்பில் மாநகர சபையுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக , யாழ். மாநகர சபை முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

அதன் போது, தற்போதைய மத்திய பேருந்து நிலையத்தின் காணி அரச காணியாக இருந்தபோதிலும், அது இதுவரை உரிய முறையில் பாரப்படுத்தப்படவில்லை என்ற விடயம் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. 

அத்துடன், யாழ்ப்பாண மாநகர சபையால் அங்கு அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தைப் பராமரித்து இயக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மலசலகூடப் பராமரிப்பு ஒப்பந்தம் 2026 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 

அதனைத் தொடர்ந்து, 2027 ஜனவரி முதல் அரச நிறுவனத்திலிருந்து மற்றொரு அரச நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கும் நடைமுறையின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம் ஒப்படைக்க முடியுமா என்பது ஆராயப்பட்டது. 

தேசிய பெறுகை வழிகாட்டல்களுக்கு அமைவாக இத்தகைய ஏற்பாடு சாத்தியமா என்பதை மாநகர சபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆராய்ந்து, விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தனியார் ஒப்பந்த முறையில் மலசலகூடப் பராமரிப்பை ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையும் கருத்திற்கொண்டு, இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம் ஒப்படைக்கும் சாத்தியத்தைச் சாதகமாகப் பரிசீலிக்குமாறு மாநகர சபை முதல்வரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது 

இது தொடர்பில் மாநகர சபையுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

அதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதி, யாழ்ப்பாணப் பெருந்திட்டத்தின் கீழ் தற்போதைய மத்திய பேருந்து நிலையப் பகுதியை எதிர்காலத்தில் பல்வகைப் போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும், அது தொடர்பான நீண்டகாலத் திட்டம் ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் தெரிவித்தார்.

No comments