வடக்கில் உத்தியோகஸ்தர்களுக்கு என விசேட சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உரிய அனுமதிகள் பெறாது சேவையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அதன் போது, ‘Staff Service’ என்ற பெயரில் இயங்கும் சில பேருந்துகள் உரிய வழித்தட அனுமதியின்றி செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இத்தகைய சேவைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட அரச அல்லது தனியார் நிறுவனத்தின் உத்தியோகபூர்வச் சான்று, நிறுவனத் தலைவரின் கையொப்பத்துடனான உறுதிப்படுத்தல், பயணிக்கும் அலுவலர்களின் விவரங்கள் மற்றும் ஆசன எண்ணிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உரிய அனுமதியின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அலுவலர்களுக்கான சேவைப் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். இவ்விடயத்தில் உரிய ஒழுங்குகளை உறுதிப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதன் போது, பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சில தனியார் பேருந்துகள் யாழ்ப்பாண நகரப் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றுவது தொடர்பிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
குறித்த பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்களைத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.





.jpeg)



No comments