யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து நெடுந்தூர சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள், எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அதன் போது, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைக்கப்பட்டு அண்மையில் மீளத் திறந்து வைக்கப்பட்ட புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் நெடுந்தூரப் பேருந்துகள் சேவைகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் அங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்காத நிலையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர், சபையின் நடைமுறைகளின்படி 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரமே நெடுந்தூரப் பேருந்துச் சேவையாகக் கருதப்படுவதாகத் தெளிவுபடுத்தினார்.
புதிய பேருந்து நிலையம் இந்தத் தூர வரையறையின் அடிப்படையிலா அல்லது வெளிமாவட்டங்களுக்கான பேருந்துச் சேவைகளைக் கருத்திற்கொண்டா அமைக்கப்பட்டது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பேருந்து நிலையம் வெளிமாவட்டங்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனையடுத்து, 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரச் சேவைகளில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளும் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் எனத் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் மற்றும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் சாலைகளின் முகாமையாளர்கள் உள்ளிட்டோர் இதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
100 கிலோமீற்றருக்குக் குறைவான உள்ளூர் சேவைகள் தற்போதைய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் ஏற்படும் நேர மோதல்கள் மற்றும் பயணிகளுக்கான சிரமங்களைத் தவிர்ப்பதற்காக நேர அட்டவணையை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் இந்த இணைந்த நேர அட்டவணைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அலுவலர்களுக்கான சேவைப் பேருந்துகளையும் உரிய ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக இந்த விகிதாசாரக் கட்டமைப்புக்குள் உள்ளடக்குவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.
அதன் அடிப்படையில் இணைந்த நேர அட்டவணையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதனை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் இறுதிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு அறிவித்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் இணைந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகளில் இணையவழி மற்றும் தொலைபேசி ஊடாக முற்பதிவு செய்த பயணிகள், தற்போது பயன்படுத்தப்படும் பேருந்து நிலையத்திலிருந்து ஏறி, பின்னர் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்தை நோக்கிப் பயணிப்பது தொடர்பில் சாலைகளின் முகாமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரச் சேவைகளுக்கான பயணிகள் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே ஏற வேண்டும் எனத் தெளிவுபடுத்தினார். இணையவழி மற்றும் தொலைபேசி ஊடாக முற்பதிவு செய்யும் பயணிகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முற்பதிவு மற்றும் பயணச் சேவை தொடர்பான பணிகளை இலகுவாக்கும் வகையில், புதிய பேருந்து நிலையத்தின் தளத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும் தனியார் பேருந்துச் சங்கத்தினருக்கும் தனித்தனியான அலுவலக அறைகளை ஒதுக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அங்கிருந்தே முற்பதிவு உள்ளிட்ட சேவைகளை முன்னெடுக்க முடியும் எனத் தலைவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளுக்கும் ஜி.பி.எஸ். கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய பேருந்து நிலையத்துக்கு சேவைகள் மாற்றப்படும் ஆரம்பக் காலத்தில் பயணிகளின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக, பொலிஸ் விசேட குழுவொன்றை ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.









No comments