Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமராட்சியில் மலேரியா நுளம்புகள் ; வெளிநாடு சென்று திரும்புவோர் இரத்தப் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தல்


இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்புவர்களினால் வடமராட்சி பிராந்தியத்தில் மீளவும் மலேரியா தொற்று பரம்பலடையும் அபாய நிலை காணப்படுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.துவாரகன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு மற்றும் சுற்றாடல் குழுக் கூட்டத்தில் , மலேரியா தொற்று நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.துவாரகன் தெரிவிக்கையில்,

 இந்தியா ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் மலேரியா தொற்று இருந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்கில் சட்டவிரோத பயணங்கள் மேற்கொள்பவர்களினால் ஆபத்து காணப்படுகிறது. 

பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகள் ஊடாக பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சி கைகூடாதவிடத்து மீளவும் தாயகம் திரும்பும் போதுதான் சிக்கல்கள் ஏற்படுகிறது. 

இதேபோன்று கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். சிகிச்சையின் பின்னர் அவர் சுகமடைந்திருந்திருந்தார்.

வடமராட்சி பிரதேசத்தில் தற்போது மலேரியா நோயாளர்கள் இல்லை ஆனால் மலேரியா தொற்றை ஏற்படுத்தும் நுளம்புகள் தாராளமாக காணப்படுகின்றன. 

குறிப்பாக வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை வரையான கரையோரப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் அதிகளவான அவ்வகையான நுளம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அது தவிர தற்போது காங்கேசன்துறை மற்றும் பலாலி ஊடாக இந்தியாவுக்கான கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. 

அதன் ஊடாக, இந்திய வர்த்தகர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளும் எமது பிரதேசத்தில் வதிபவர்களும் அதிகளவாக  பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவில் மலேரியா தொற்று இருப்பதால் இவ்வாறு பயணங்களை மேற்கொள்பவர்கள் முற்கூட்டியே மலேரியா தடுப்பு மருந்துகளை எடுப்பதன் மூலமும் இந்தியா சென்று திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து ஒரு கிழமைக்குள் மலேரியா தொற்று இரத்த பரிசோதனையினை மேற்கொள்வதன் மூலமும் மலேரியா தொற்று அபாயத்தை குறைத்து கொள்ள முடியும். 

எனவே ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களும் தமது பிரிவில் இந்தியாவில் இருந்து திரும்பியவர்கள் இனம் காணும் பட்சத்தில் அவ்வாறனவர்களை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கோ அல்லது அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கோ சென்று மலேரியா பரிசோதனையை செய்யவும், இந்தியாவுக்கு செல்பவர்களை முற்கூட்டியே மலேரியா தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலம் மலேரியா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அலுவலகத்தில் மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்தும் மீன் குஞ்சுகள் தாராளமாக உள்ளன. 

கட்டாயமாக கிணறுகளில் இந்த வகை மீன் குஞ்சுகளை விடுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவற்றை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலககத்திற்கு பெற்றுக்கொள்ள வழிப்படுத்தல்களை வழங்கினால் அவற்றை விநியோகிக்கலாம். என மேலும் தெரிவித்திருந்தார்

No comments