பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 11 மாதங்களில் 127 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் எதிர்வரும் நாட்களின் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் ப.தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற டெங்கு மற்றும் சுற்றாடல் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்ட போதே, பருத்தித்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி சத்தியரூபன் சூரிகா டெங்கு நோய் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டிருந்தார்.
மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஆம் ஆண்டு 12 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , 2022 இல் 222 ஆகவும், 2023 இல் 364 ஆகவும் அதிகபட்சமாக 2024 இல் 529 ஆகவும் காணப்பட்டது. 2025 இல் 174 ஆக குறைவடைந்திருந்தது.
டெங்கு தடுப்பு செயற்பாடுகளினால் இவ்வாறான கட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி வரையில்,127 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் அதிகபட்சமாக தலா 27 பேரும் பருத்தித்துறை பிரிவு 2 இல் 20 பேரும், பருத்தித்துறை நகரசபைக்குட்பட்டு 18 பேரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதேநேரம், அல்வாய் மேற்கில் 12, கெருடாவில் தெற்கில் 10, அல்வாய் வடக்கு, பொலிகண்டி மேற்கு மற்றும் புலோலி வடக்கில் தலா 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் அதிகூடிய டெங்கு அபாய வலையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக மழை காலம் முடிவடைந்த பின்னர்தான் டெங்கு நோய் தாக்கம் தீவிரமடையும். அந்தவகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெப்ரவரியில் 12 பேரும், மார்ச்சில் 15 பேரும், ஏப்ரலில் 17 பேரும், மேயில் 18 பேரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த செப்டெம்பரில் 5 போராக இருந்த நிலையில் இடையில் பெய்த மழையின் காரணமாக ஒக்டோபரில் 11 ஆக சடுதியான உயர்வை பதிவு செய்துள்ளது.
தற்போதுவரை இந்த மாதத்தின் முதல் 11 நாளில் 2 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலை தற்காலிகமானதே. இந்த ஆண்டின் எந்த ஒரு மாதத்திலும் டெங்கு நோயாளர்கள் இல்லாமல் இல்லை என்கிற நிலைதான காணப்படுகிறது. தற்போதைய பருவமழையின் பின்னர் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயநிலை காணப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன் ஏனைய இடங்ளிலும் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதன் அவசியம் குறித்து மேலும் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோரால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
சுகாதார தரப்பினர், பிரதேச செயலக தரப்பினர், உள்ளுராட்சி மன்றங்கள், பொது அமைப்புகள் இணைந்து எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



No comments