யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்குமான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக
இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய முதலீட்டாளரான தத்தோ . எஸ். சுந்தர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்து, அவற்றின் மூலம் பல்வேறு ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் மக்களின் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு பங்களிப்பு வழங்குவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் தெரிவித்தார்
சிறுதானியங்களுக்குத் தேவையான தரமான விதைகளை இந்தியாவிலிருந்து பெற்றுக்கொண்டு, சிறுபோக காலங்களில் அவற்றைப் பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன் ஊடாக கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி மற்றும் பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களைப் பயன்படுத்தி பல்வேறு ஆரோக்கியமான உற்பத்திப் பொருட்களைத் தயாரித்து, அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் கே.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், Biz Net நிறுவன இயக்குநர் F. சியான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.












No comments