பருவ மழை காலத்தில் கடந்த காலங்களை போன்று , காங்கேசன்துறை - நாகபபட்டினம் இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் , இம்மாதம் சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளதாகவும் , கப்பல் சேவை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையில் கப்பல் சேவையில் ஈடுபடும் "சுபம் ஃபெர்ரி கப்பல் நிறுவனத்தினர் காங்கேசன்துறையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்.
காங்கேசன்துறைக்கும் , நாகப்பட்டினத்திற்கும் இடையில் கப்பல் சேவையை முன்னெடுத்து வருகின்றோம். இம்முறை பருவமழை ஆரம்பித்தாலும் , கடந்த காலங்களை போன்று சேவைகளை இடைநிறுத்தது , தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.
எமது கப்பல் சேவை ஊடாக, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்க முடியும்.
இந்தியாவில் இருந்து பெருமளவானோர் பொருட்களை எடுத்து வருவதால் , பொருட்களின் நிறை அதிகரிப்பு காரணமாக , பயணிகளின் எண்ணிக்கையை 110 பேராக மட்டுப்படுத்தியுள்ளோம். யாழ்ப்பாணத்தில் இருந்து பெருமளவில் இந்தியாவிற்கு பொருட்கள் எடுத்து செல்லாததால் , இங்கிருந்து 150 பயணிகள் பயணிக்க முடியும்.
தற்போது ஒவ்வொரு பயணியும் தம்முடன், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எதவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்ல முடியும்.
30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு, 5 கிலோ வரையில் 5ஆயிரத்து 250 ரூபாயும் , 10 கிலோ வரையில் , 8ஆயிரத்து 750 ரூபாயும் . 30 கிலோ வரையில் 21 ஆயிரம் ரூபாய் வரையில் அறவிடப்படும்.
அத்துடன் கப்பல் போக்குவரத்திற்கான ஒரு வழி கட்டணம் பெரியவர்களுக்கு 19ஆயிரத்து 250 ரூபாயும், சிறுவர்களுக்கு 17500 ரூபாயும் அறவிடப்படவுள்ளது. கடந்த காலங்களில் பெரியவர்களுக்கான ஒரு வழி கட்டணமாக 21 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டது
இந்திய செல்வதற்கான விசா ஏற்பாடுகளை எமது நிறுவனமே அதற்குறிய கட்டணங்களை பெற்று செய்து தரும். எனவே இம்மாதம் எமது நிறுவனத்தால் சிறப்பு சலுகைகளுடன் முன்னெடுக்கப்படும் கப்பல் சேவைகளுக்கு முற்பதிவுகளை செய்து கொள்ள முடியும் என தெரிவித்தனர்.








No comments