Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொன்னாலையில் தற்காலிக வீட்டில் தீ ; முக்கிய ஆவணங்களும் பணமும் தீக்கிரை


பொன்னாலை மேற்கில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்த தகரக் கொட்டகை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது. 

தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. எனினும் பெறுமதிமிக்க ஆவணங்களும் ஒரு தொகைப் பணமும் எரிந்து அழிந்துள்ளன.

நேற்று (24) சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ரவிக்குமார் ஜோன்சன் மரீன் என்பவரின் தகரக் கொட்டகையே எரிந்து அழிந்தது. சுவாமி படத்திற்கு ஏற்றிய விளக்குத் திரியை எலி இழுத்துச் சென்றதாலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளை உள்ளடக்கிய மேற்படி குடும்பம் குறைந்த வருமானம் உடையது என்பதால் சுயமாக வீட்டினைக் கட்டிக்கொள்ள முடியவில்லை. இதனால் தகரக் கொட்டகை ஒன்றினுள் வசித்து வந்தது. அரச வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்த போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.

சம்பவ நேரம் குடும்பத் தலைவி சுவாமி படத்திற்கு விளக்கேற்றிவிட்டு வெளியே வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அங்கு ஒன்றுகூடிய அயலவர்களும் குடும்பத்தினரும் தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்க முற்பட்டபோதிலும் கொட்டகை வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து அழிந்தது.

உள்ளே இருந்த காணி உறுதி, பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள், மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து அழிந்துள்ளன. கடற்றொழிலாளியான இவர் புதிதாக வாங்கி வைத்திருந்த வலைகள். மின்சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், உடுபுடவைகள் உட்பட அனைத்துமே எரிந்து அழிந்துள்ளன. அணிந்திருந்து உடையைத் தவிர மாற்று உடைகூட எஞ்சியிருக்கவில்லை.

குறித்த குடும்பஸ்தர் பொன்னாலை ஸ்ரீகண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளராக இருந்தமையால் தொழிலாளர்களுக்கு இடையே சுழற்சி முறையில் கடன் வழங்குவதற்கான இலட்சக்கணக்கான ரூபா பணமும் இவரிடம் இருந்துள்ளன. அப்பணம் மற்றும் சங்க ஆவணங்களும் தீயில் எரிந்து அழிந்தன. எனினும் ஒருதொகை நாணயத் தாள்கள் அரைகுறையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு வந்த கிராம சேவையாளர் ந.சிவரூபன் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸார் ஆகியோர் சேத விபரங்களைப் பார்வையிட்டனர். சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த வருமானத்தில் இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த மேற்படி குடும்பம் இருந்த கொட்டகையும் எரிந்து அழிந்துள்ளமையால் வசிப்பிடம் இன்றி நிர்க்கதி நிலையை அடைந்துள்ளது.

No comments