Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.மேல் நீதிமன்றம் இருவருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது!


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலான  வழக்கில் எதிரிகள் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த கொலை குற்றத் தீர்ப்பையும், தூக்குத் தண்டனையையும் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கடந்த 2010ஆம் ஆண்டு மாசி மாதம் 3ம் திகதி இரவு கொழும்புத்துறையைச் சேர்ந்த கடற்தொழிலாளியான மார்க்கண்டு சிவராசா என்பவர் தனது வீட்டுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். 

சடலத்தில் குருதி தோய்ந்த காயங்கள் காணப்பட்ட நிலையில் புலன் விசாரணை நடாத்திய யாழ்ப்பாண குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இறந்தவரின் மனைவியையும், சக கடற்தொழிலாளியான நண்பர் ஒருவரையும் கைது செய்தனர். 

அதனை அடுத்து இறந்தவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கொலைக்கு உபயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட கத்தி, மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டன. 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற சுருக்கமுறையற்ற விசாரணையின் பின் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டது. 

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. விஸ்வநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு,  இரண்டு எதிரிகளுக்கும் எதிரான கொலைக் குற்றச்சாட்டு அரச தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டு  இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து எதிரிகளான கமலநாதன் கங்காதரன், சிவராசா சுமதி ஆகிய இருவரும், தமது சட்டத்தரணிகள் மூலம் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பந்துல கருணாரத்ன, ஜீ. குருசிங்க ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

மேன்முறையீடுகளை ஆதரித்து, முன்னிலையான சட்டத்தரணிகள், கொலை தொடர்பில் கண்கன்ட சாட்சியம் இல்லாத நிலையில், திருப்திகரமான சந்தர்ப்ப சூழ்நிலைச் சாட்சியம் முன்வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே குற்றத்தீர்ப்பு வழங்கப்பட முடியும்  தமது சமர்ப்பணங்களில் சுட்டிக்காட்டினார்கள்.

இரண்டு எதிரிகளும், ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு, புலன் விசாரணையின் போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது வரையிலான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியும், பெண் பொலிஸ் கான்ஸ்ரபிளும் முரண்பாடான முறையில் சாட்சியம் அளித்திருப்பதை மூத்த சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

முதலாம் எதிரி கைது செய்யப்பட்ட இடம், நேரம் என்பது பற்றியும் கொலைக் கருவிகளை கைப்பற்றிய பொலிஸ் அதிகாரி யார்? ஏன்பது தொடர்பிலும் இருவரின் சாட்சியமும் பாரதூரமான முறையில் முரண்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொலைக் கருவிகள் வழக்கு விசாரணையில் பொலிஸ் சாட்சிகளால் முறையாக அடையாளம் காட்டப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் மேலும் சமர்ப்பித்தார்.  

இந்தகைய நிலையில் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது சட்டரீதியானது அல்ல என்றும் மூத்த சட்டத்தரணி வாதாடினார். 

பிரதிவாதியான சட்ட மா அதிபர் தரப்பில் முன்னிலையான அரச சட்டவாதி தனது பதிலுரையில், மறுதரப்பினால் சுட்டிக்காட்டப்பட்ட முரண்பாடுகள் முக்கியமானவை அல்ல என்று தெரிவித்தார். 

முதலாம், இரண்டாம் எதிரிகளுக்கிடையில் இருந்த தகாத நட்புக் காரணமாக, சம்பவ தினம் பகல் இறந்தவரும் முதலாம் எதிரியும் கடுமையாக வாக்குவாதப் பட்டதைப்பற்றி இறந்தவரின் மகளான சிறுமி சாட்சியம் அளித்துள்ளார் என்று அரச சட்டவாதி குறிப்பிட்டார்.

எதிரிகள் இருவரும் அளித்த வாக்குமூலங்களின் பிரகாரமே இறந்தவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியும், மண்வெட்டியும் கைப்பற்றப்பட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டி மேலும் வாதாடினார். 

இருதரப்பு வாதங்களின் பின்னர் தீர்ப்பு வழங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள், அரச தரப்பு சாட்சியத்தில் சில முக்கியமான விடயங்களில் காணப்படும் திட்டவட்டமான முரண்பாடுகளை புறம் தள்ள முடியாது எனத் தெரிவித்து மேல் நீதிமன்றம் வழங்கிய குற்றத்தீர்ப்பையும் தூக்குத் தண்டனையையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

No comments