Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஒட்டுசுட்டான் உப பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தவறாக வழி நடத்தி , அப்பகுதி மக்களை வஞ்சித்து வருவதாக , புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

ஒட்டுசுட்டான் பகுதியில் பண்ணை ஒன்றினை நடாத்தி வருகிறோம். அதேவேளை பண்ணையில் வைத்து நாம் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகின்றோம். 

இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த பொலிஸார் எமது பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்து காணியின் உரிமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர். 

பின்னர் என்னிடம் நீ புலி கட்சியா ? உதவிகளை புலி கட்சி ஊடாகவா செய்கிறாய் என மிரட்டி விசாரணைகளை முன்னெடுத்தனர். 

என்னிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டது, உப பொலிஸ் பரிசோதகரான சுபேசன் எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரே .. 

என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் எமது அனுமதியின்றி , அத்துமீறி எமது அலுவலகத்தினுள் புகுந்ததுடன் சப்பாத்து கால்களுடன் , சாமியறைக்குள் புகுந்து சாமி படங்களை தூக்கி சோதனை செய்தனர். 

அறைக்குள் இருந்து எமது கட்சியான "புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி" எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகையை , ஏதோ பயங்கர ஆயுதம் ஒன்றினை மீட்டு வருவது போன்ற பீடிகையுடன் வந்து , அதில் உள்ள பெயரை முழுமையாக பொறுப்பதிகாரிக்கு மொழி பெயர்ப்பு செய்யாமல் , விடுலைப்புலிகள் என எழுதி இருப்பதனை மட்டும் மொழி பெயர்த்தார். 

அதனை அடுத்து என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். நான் ஏற மறுத்த போது கைவிலங்குடன் வந்து என்னை மிரட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். 

நான் மறுத்த போது , மீண்டும் எமது அலுவலகத்தினுள் புகுந்து , மேற் கூரைகளுக்குள் ஏறி சோதனை இட்டனர். அதனை எனது மனைவி காணொளி எடுத்தார். நான் எனக்கு தெரிந்த ஊடகவியலாளர்கள் , பொலிஸ் உயர் அதிகாரிகள் ,உள்ளிட்ட தரப்புகளுக்கு இந்த விடயத்தை உடனே தொலைபேசி ஊடாக தெரிவித்தனர். 

அலுவகத்தை சோதனையிட்டவர்கள், மீண்டும் என்னிடம் வந்து பொலிஸ் நிலையம் போக வேண்டும் வாகனத்தில் ஏறு என மிரட்டினார்கள் , நான் பொலிஸ் வாகனத்தில் வர மாட்டேன். எனது மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையம் வருகிறேன் என்றேன். 

நீண்ட இழுபறியில் பின்னர் சிவில் உடை தரித்த பொலிஸார் எனது மோட்டார் சைக்கிளை செலுத்த என்னை பின்னால் ஏறி அமருமாறு கூறி அழைத்து சென்றனர். 

நான் பொலிஸ் நிலையம் செல்ல முன்னர் , நான் அறிவித்த ஊடகவியலாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் எதற்காக அவரை கைது செய்தீர்கள் என வினவிய போது , தாம் கைது செய்யவில்லை. விண்ணப்ப படிவம் ஒன்றினை நிரப்பவே பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தோம் என பதில் அளித்தார் 

ஆனால் , பொலிஸார் விண்ணப்ப படிவம் தொடர்பில் எதுவும் என்னிடம் கூறவில்லை. பொலிஸ் நிலையத்தில் என்னை தடுத்து வைத்திருந்த வேளை மேலிடங்களில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்களை அடுத்து , பொலிஸ் பொறுப்பதிகாரி என்னை அழைத்து , உங்கள் கட்சி பற்றி இப்ப தான் தெரியும்.என கூறி என்னை சமரசப்படுத்தி , இனி ஏதாவது உதவிகள் செய்யும் போது பொலிஸாரின் உதவிகள் தேவை எனில் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறி என்னை அனுப்பி வைத்தார். 

இதன் பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பிழையாக வழி நடத்திய உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் ஊரவர்களிடம் விசாரித்த போது , குறித்த உத்தியோகஸ்தர் தனக்கு வேண்டாதவர்கள் , தன்னுடன் தர்க்க படுபவர்களை பொய் வழக்குகள் தொடர்ந்து சிறைகளில் அடைத்து உள்ளமை தெரிய வந்துள்ளது.

இவரால் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கே சென்று யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளனர். 

மக்களுக்கு உள்ள மொழி பிரச்னையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி , பொறுப்பதிகாரியை பிழையாக வழிநடத்தும் குறித்த உத்தியோகஸ்தருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் எடுக்க வேண்டும். 

ஊடகங்கள் ஊடாக அனைத்து தரப்பிடமும் கேட்டு கொள்வது , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் புலனாய்வு பிரிவுகளை சேர்ந்தவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து , பாதிக்கப்பட்ட மக்களில் வாக்கு மூலங்களை பெற்று , அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

தாங்கள் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என மனநிலையில் பல பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளனர். என மக்களுக்கு அநீதி இழைத்து பல பொய் வழக்குகளை தொடுத்துள்ள இந்த உப பொலிஸ் பரிசோதகருக்கு பொலிஸ் திணைக்களம் கொடுக்கும் தண்டனை ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என தெரிவித்தார். 

No comments