கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இலங்கையில் 3 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார்.
“03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும்.
கண்டியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு அவற்றின் இரண்டு கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன் அவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் தயாராக உள்ளோம்.
மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், தனியார் உயர்கல்வித் துறையை முறைப்படுத்த வேண்டும். ஆனால் கல்வித்துறையை விற்பனை செய்வதற்கு நாம் தயாரில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments