தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது கடந்த 1ஆம் திகதி விடுவிக்கப்பட்டநிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தெல்லிப்பளை பிரதேசத்திற்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக விஜயம் செய்தார்.
வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜே. ஏ. அருள்தாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.
இதன் போது அப் பிரதேசத்தில் கண்ணிவெடி தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் Hallo Trust நிறுவனத்துடன் மாவட்ட செயலர் கலந்துரையாடிய போது, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை எதிர்வரும் 07ஆம் திகதியே நிறைவடையும் என Hallo Trust நிறுவனம் தெரிவித்த நிலையில் , மறுநாள் வியாழக்கிழமை தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டதன் பின்னர் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தமது காணிகளுக்கச் சென்று காணிகளை அடையாளப்படுத்தி தொடர் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட செயலர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாங்கொல்லை கிராமத்தில் விடுவிக்கப்பட்ட 15.13 ஏக்கர் காணியை நேரில் சென்று பார்வையிட்டார்..
அதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ. சிவகுமார், பாதுகாப்பு படை அதிகாரி, கிராம அலுவலர்கள், Hallo Trust நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அப் பகுதி மக்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.
No comments