Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் இருவருக்கு மலேரியா


யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மலேரியா தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கையில் மலேரியா நோய் பரம்பல் பூரணமாக ஒழிக்கப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தபட்டது.

இந்நிலையில் எமது நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஐரோப்பிய, வடஅமெரிக்க கண்டங்களுக்கு சட்ட விரோதமாக சென்று குடியேறும் நோக்குடன் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர். இவர்களில் பலர் ஐரோப்பிய, வட அமரிக்க கண்டங்களுக்குச் செல்ல முடியாது பல மாதங்களாக ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்து விட்டு எமது நாட்டிற்கு மீண்டும் திரும்பி வரும் போது அவர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. 

இவ்வாறாக எமது நாட்டில் கடந்த பல வருடங்களாக மலேரியா அதிக பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. 

இதன்படி இலங்கையில் 2021 ஆம் ஆண்டு 26 பேரும், 2022 இல் 37 பேரும், 2023 இல் 62 பேரும், 2024 இல் 38 பேரும், 2025 இல் 29 பேரும் நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். 

அவ்வாறே யாழ் மாவட்டத்திலும் 2021 ஆம் ஆண்டு 2 பேரும், 2022 இல் 7 பேரும், 2023 இல் 6 பேரும், 2024 இல் 2 பேரும், 2025 இல் இது வரையான காலப்பகுதியில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்த வாரம் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் ஆபிரிக்க நாடான டோகாவிற்குச் சென்று கடந்த 30 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பிய 2 நோயாளர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. 

முதலாவது நோயாளி நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி நெடுந்தீவை வந்தடைந்துள்ளார். 

இவர் ஏற்கனவே வேறு பல நோய்களுக்கு உட்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். 

யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

ஒக்டோபர் 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம் இவர் ஆபிரிக்க நாட்டிற்கு சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் நாளத்தின் ஊடாக ஏற்றப்பட்டது. 

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. 

ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறுநோய் நிலைகளால் அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். 

மேற்படி நோயாளியுடன் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரும் டோகா நாட்டில் தங்கியிருந்து நாடு திரும்பியுள்ளார். 

இத்தகவல் கிடைத்ததுமே மலேரியா தடுப்பு இயக்க உத்தியோகத்தர்கள் இவருக்கு மலேரியா பரிசோதனைகளை மேற்கொண்ட போது இவருக்கும் Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இவருக்கு காய்ச்சலோ அல்லது வேறு எந்த நோய் அறிகுறிகளோ நோய் அறிகுறிகளோ காணப்படவில்லை. இருப்பினும், இவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மலேரியாவிற்கான பூரணமான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த 2 நோயாளிகளைப் பொறுத்த வரையில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எவ்விதத்தாமதமும் இன்றி உடனடியாக தமது மலேரியா தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

எமது நாட்டில் மலேரியா நோயின் உள்ளூர் பரம்பல் முற்றாக ஒழிக்கப்பட்டாலும் மலேரியா நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் இன்னமும் காணப்படுகின்றன. 

எனவே, மேற்படி நோயாளர்களிடம் இருந்து அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மலேரியா நோய் பரவாதிருக்க அவர்களது வதிவிடங்களைச் சுற்றி நுளம்புகளுக்கான பூச்சியியல் ஆய்வும், நுளம்புகளை அழிக்கும் புகையூட்டல் நடவடிக்கைகளும் வீடுகளுக்கான நுளம்பு கொல்லி மருந்துகளை விசிறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்குடன் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பொது மக்கள் பண்ணையில் அமைந்துள்ள மலேரியா தடுப்புப் பணிமனையுடன் தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். 

அவர்கள் அந்த நாடுகளில் தங்கியுள்ள காலப்பகுதியில் இத்தடுப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் மலேரியா நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். அடுத்ததாக மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் நாடு திரும்பியவுடன் மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையை எமது வைத்தியசாலைகளில் மேற்கொண்டு உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

எனவே, பொது மக்கள் அனைவரும் மலேரியா பரம்பல் அதிகமாகக் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்குச் செல்லும் போது மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாண்டு எமது நாட்டில் மலேரியா நோய் பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

No comments