Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை


“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என  இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை இங்கு பதிவு செய்கின்றோம்.

இந்த அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று ஒரு முழு ஆண்டு ஆன பின்னும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடிய முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. அந்தச் சட்டத்துக்கு மாற்றாக எந்தப் புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்துக்குரியது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் 240 மனித எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்குப் புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை. இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை.

மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கின்றது.

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது.

இது பல ஆண்டுகள் தேர்தலைத் தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டைக் காட்டுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையைத் தொடர்ந்து உதாசீனப்படுதலைக் காட்டி நிற்கின்றது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்வைத்த தனிநபர் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றுள்ளது

No comments