Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சம்பத் மனாம்பேரியை நாமல் பொலிஸிடம் ஒப்படைக்க வேண்டும்


ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்களில் மூலப்பொருட்களை மறைத்துவைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் மனம்பேரி என்ற சந்தேகநபர் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அத்தோடு அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கிலும் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது காவலில் உள்ள மற்றும் கைது செய்யத் தேடப்படும் இரண்டு நபர்களும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுன அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டதால் தான் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். எவ்வாறிருப்பினும் அது மாத்திரம் போதாது.

அவரை பொலிஸில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுஜன பெரமுன ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சம்பத் மனம்பேரி என்ற குறித்த சந்தேகநபர் நீண்ட காலம் பொலிஸ் கான்ஸ்டபிளாகவும், பின்னர் குறுகிய காலம் புலனாய்வுத்துறை அதிகாரியாகவும் செயற்பட்டிருக்கின்றார்.

பொலிஸார் அவரை தேடும் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். 

அவர்கள் வழங்கும் வாக்குமூலம், சாட்சியங்களுக்கமைய இவற்றுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படுவர். சந்தேகநபரது குடும்பத்துடன் தங்காலை, மித்தெனிய மற்றும் அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளனர்.

எனவே, நாமல் ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய விடயம், சம்பத் மனாம்பேரியை பொலிஸாரிடம் ஒப்படைப்பதாகும் என்றார். 

இதேவேளை சர்ச்சைக்குரிய இரு கொள்கலன்கள் எவ்வாறு விடுவிக்கப்பட்டன என்பது தொடர்பில் சுங்க திணைக்களமும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

திட்டமிட்டு அவை விடுவிக்கப்பட்டிருந்தால் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 


No comments