பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் தாதியர்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு ஆவணி மாதத்தில் சுமார் 3000 தாதியர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக, இவ்வாரம் அவர்கள் பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் உள்ள 16 தாதியர் பயிற்சி கல்லூரிகளில் இப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியும் வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றன.
யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக்காக 100 பயிற்சியாளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் பயிற்சியை 2029 ஆம் ஆண்டில் நிறைவு செய்தவுடன், உடனடி நியமனம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தற்போது பணிபுரியும் தாதியர்களில் சுமார் 50% பேர் இலங்கையின் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் முதல் நியமனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி பின்னர் மாற்றம் பெறுகின்றனர்.
இதனால், பல வைத்தியசாலைகளில் அனுபவமிக்க (சிரேஷ்ட) தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
வடக்கில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தாதியர் பயிற்சியைத் தேர்வு செய்து தொழிலில் நுழைவது மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமான ஒரு வாய்ப்பாகும்.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. தேவையானவர்களுக்கு இலவச இருப்பிட வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இதனால், பல்கலைக்கழகப் படிப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த மூன்று ஆண்டுகளை பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக நிறைவு செய்ய முடிகின்றது.
மேலும், பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது.
இதேவேளை, பல பல்கலைக்கழகங்கள் BSc Nursing பட்டப்படிப்பையும் வழங்குகின்றன. அவற்றை முடித்தவர்கள் ஆறு மாத உள்ளகப் பயிற்சிக்குப் பிறகு வைத்தியசாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.
தாதியர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்ட பின்னரும் பல்வேறு கட்டங்களில் மேலதிக பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஆதார வைத்தியசாலைகள், பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் நிபுண மருத்துவர்கள் பணியாற்றுவதால், விஷேட சேவைக்கு ஏற்ப தாதியர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிகிறது.
தாதியர் பயிற்சி கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் பயின்ற பின் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. பலர் பின்னர் பணியில் இருக்கும் போது BSc Nursing பட்டப்படிப்பையும் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றனர்.
அதன் பின்னர் MSc மற்றும் PhD போன்ற உயர் பட்டப்படிப்புகளையும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
வளர்ந்த நாடுகளில் தாதியர்கள் பேராசிரியர்களாக உயர்ந்து விளங்குகின்றனர். அதேபோன்று, இலங்கையிலும் இத்தகைய உயர்வுகளை அடையும் வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே, தாதியர் தொழில் என்பது சேவை உணர்வுடன் கூடியதோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் கொண்ட ஒரு சிறந்த துறையாகும்.
ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவர் தாதியராக இருந்தால், அந்தக் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் சுகாதார சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. அவர்களால் பிறரை சரியான சிகிச்சை சேவைகளுக்கு வழிநடத்தவும் முடிகிறது.
பயிற்சி காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன.
பயிற்சி பெறும் காலத்தில், வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அனுபவம் பெறுவதன் மூலம், பின்னாளில் எளிதாக கடமையாற்றும் திறனை அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர்.
தற்போது இலங்கையின் அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 42,000 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் 6000 பேர் பயிற்சியில் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தற்போது 725 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிக்காக 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அடுத்த சில மாதங்களில் 2500 புதிய தாதியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2022, 2023, 2024 ஆண்டுகளில் பரீட்சை எழுதியவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
தாதியர் பயிற்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால், இப்பயிற்சியில் சேரும் மாணவர்கள் எதிர்காலத்தில் மும்மொழித் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர்.
சில தாதியர்கள் மேல்படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இலங்கையில் வழங்கப்படும் தரமான பயிற்சி காரணமாக, வெளிநாடுகளில் தொழில் பெறுவதும் எளிதாக உள்ளது.
எனவே, வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார்.











No comments