யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர்,
இவ் வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சினால் 827 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக 281 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் , அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடுகளுக்கு - அமைச்சரவை மூலம் ஒரு வீட்டிற்கு 1.50 மில்லியன் ரூபாவிலிருந்து அதிகரித்து 2.00 மில்லியன் ரூபாவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.
கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றில் வீட்டு திட்டங்களுக்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை மேலதிகமாக வழங்குவதற்கான கோரிக்கையையும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2018 மற்றும் 2019 இடைநடுவில் கைவிடப்பட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி வழங்குதல் தொடர்பான கோரிக்கையையும் மாவட்ட செயலர் முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் - காணி இல்லாதவர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாகவும், வீட்டுத்திட்டம் இல்லாதோர் விபரங்கள், வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள், எதிர்காலத்தில் தேவையான வீடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் உறுதி அளித்தார்.





.jpg)



No comments