மயூரப்பிரியன்.
ஆலயங்களில் பக்தி பரவசமும் , கொண்டாட்ட மனைநிலைகளில் இருக்கும் போது, எதிர்பாராத விதமான அசம்பாவிதங்களால், திருவிழா சோகத்தில் முடிவது மிகுந்த வேதனைக்குரியது.
திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த லேசர் மின் விளக்குகள் , அதிக ஒளியினை தர கூடிய அதி சக்தி வாய்ந்த மின் விளக்குகள் , வாணவேடிக்கை என கொளுத்தப்பட்ட வெடிகளால் ஏற்பட்ட புகைகள் மற்றும் கூட்ட நெரிசல் ஆகியவற்றால் ஒரே நேரத்தில் பலருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் , பண்டத்தரிப்பு , பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
மூன்றாம் திருவிழாவான கடந்த வியாழக்கிழமை இரவு , விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கண்கவர் மின் விளக்கு அலங்காரம் , அதீத வெளிச்சம் தர கூடிய அதி சக்தி வாய்ந்த மின் விளக்குகள் என இரவை பகலாக்கி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , வாணவேடிக்கைகளால் வானமும் அதிர்ந்தது.
கண்கவர் மின் விளக்கு அலங்காரம் , கண்கவர் வாணவேடிக்கை , சிலம்பாட்டம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்வு என அன்றைய இரவு சின்னன் சிறுசுகள் தொடக்கம் பெருசுகள் வரையில் பலரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
அளவுக்கு மிஞ்சினால் , அமுதமும் நஞ்சு என்பது போல முதல்நாள் இரவு கண்கவர் நிகழ்வு மறுநாள் காலை பலரின் பார்வையை மங்க செய்தது.
முதல்நாள் இரவின் அதிக மின்விளக்கு வெளிச்சமும் , வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மண்டலத்தாலும் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை, பலருக்கு, கண் வலி, கண் எரிச்சல், அதிக கண்ணீர் வடிதல், பார்வையில் மாற்றம் அல்லது கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
ஆரம்பத்தில் அதற்கான காரணங்கள் தெரியாமையால் , பலரும் வீடுகளில் சிரமப்பட்ட நிலையில், சிலர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு கண்களை பரிசோதித்த வைத்தியர்கள் , திடீரென கண்ணில் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரித்த போதே முதல்நாள் திருவிழா சம்பவம் தெரியவந்துள்ளது.
அதற்கிடையில் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கண் பாதிப்பு தொடர்பில் சிகிச்சைக்காக சிலர் செல்ல தொடங்கியதும், வைத்தியர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு , சுகாதார பணிமனைக்கு அறிவித்ததுடன் , மாவட்ட செயலர் உள்ளிட்ட தரப்புக்கும் தகவல் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து விரைந்து செயற்பட்டவர்கள், சுகாதார பணிமனையினர் , மாவட்ட செயலகத்தினர் , சங்கானை பிரதேச செயலகத்தினர் உள்ளிட்டவர்கள் களத்தில் இறங்கி , கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடியாக வைத்தியசாலையை நாடி சிகிச்சையை பெறுங்கள் என ஆலய சூழல், அயல் கிராமங்கள் என வாகனங்களில் அறிவிப்பு செய்தனர்.
அதன் பின்னரே பலருக்கு , தமக்கு மட்டும் கண் பாதிப்பு இல்லை. முதல்நாள் இரவு திருவிழாவிற்கு சென்ற பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விடயம் தெரியவந்ததும் , சிறுவர்கள் , மாணவர்கள் , முதியவர்கள் என பலரும் வைத்தியசாலையை நாடினர்.
இதனால் யாழ்.போதனா வைத்தியசாலை நெருக்கடியை எதிர்கொண்டது. விரைந்து செயற்பட்ட போதனா வைத்தியசாலை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைவான செயற்பாட்டில் ஈடுபட்டனர்
கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் , வைத்தியர்கள் , தாதியர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட்டனர். மேலதிக ஊழியர்களும் பணிக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டதுடன் , 60 மேலதிக படுக்கைகளுடன் கூடிய குறுகிய கால தங்குமிட பிரிவுகளும் திறக்கப்பட்டன. இரு விடுதிகள் கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கி சிகிச்சை பெற ஏதுவாக தயார் படுத்தப்பட்டன.
அந்த வகையில் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாத்திரம் 387 பேர் வெள்ளிக்கிழமை இரவு வரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறாக திடீரென எதிர்பார்க்காத விதமாக பலர் , வைத்திய சிகிச்சைக்காக வந்தமையால் , அவர்களுக்கான போதுமான மருந்துகள் , உணவு , குடிநீர் வசதிகள் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டன.
கண் பாதிப்புக்கு உள்ளான, க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு , வெள்ளிக்கிழமை மதியமே அவர்களின் பரீட்சையை கருத்தில் கொண்டு அவர்களை வீடு திரும்ப வைத்தியர்கள் அனுமதித்துடன் கண் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.
அதேநேரம் ஏனையவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் சனிக்கிழமை மாலை வீடுகளுக்குத் திரும்பினர்.
வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்ட செயலரின் அறிவித்தல்
இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டன.
எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தை யும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது கவலையளிக்கிறது.
எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.





.jpg)



No comments