யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான நிர்வாக நடைமுறைகளை வெளிப்படையாக விளக்க வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபான சாலைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி வழங்கும் செயல்முறையில், அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கப்பட வேண்டிய நடைமுறை ஏதேனும் உள்ளதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தவித தகவலும் வழங்காமல் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக உரிய விளக்கம் வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் உயர் நிர்வாகப் பதவிகளில் ஒரே அதிகாரிகள் நீண்டகாலம் தொடர்ச்சியாக பணியாற்றுவது தொடர்பாகவும் பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன.
நீண்டகால ஒரே இடப் பதவி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
எனவே, மதுபான நிலையத்திற்கான அனுமதி தொடர்பான முழு நடைமுறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பு, மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டதா என்பதுடன், யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான நிர்வாக நடைமுறைகளும் வெளிப்படையாக விளக்கப்பட வேண்டும்.
ஊழல் இடம்பெற்றுள்ளது என உறுதியான ஆதாரமின்றி முடிவு செய்வதை விட, இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும், அடுத்த ஆண்டில் யாழ்ப்பாணத்தின் நிர்வாகத் துறையில் தேவையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களும் சமூகப் பிரதிநிதிகளும் என்னுடன் கலந்துரையாடியபோது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அதிகாரிகளின் பணியிட மாற்றம் தொடர்பான தங்களது எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது ஒருவரை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் விடயம் அல்ல. மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், வெளிப்படையானதும் பொறுப்புக்கூறலுடனும் கூடிய நிர்வாகத்தை உறுதி செய்வதே முக்கியமானது என தெரிவித்தார்.









No comments