பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சு, அதன் கீழான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு அறிவுறுத்தினார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்கள் தமது பிரதேசங்களில் குப்பை கொட்டப்படும் இடங்களை அடையாளப்படுத்தி, கண்காணிப்புக் கமராக்களை நிறுவி, விதிமுறைகளை மீறுவோரைக் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
குறிப்பாக, கண்காணிப்புக் கமராக்களின் ஊடாக குப்பை கொட்டுவோரைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டுவரும் நல்லூர் பிரதேச சபையின் செயற்பாட்டை பாராட்டுகிறேன், இதன் மூலம் சுமார் 8 இலட்சம் ரூபா வரை தண்டத் தொகை அறவிடப்பட்டுள்ளது.
இத்தகைய நடைமுறைகள் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களாலும் பின்பற்றப்பட்டு, பொது இடங்களில் பொறுப்பற்ற முறையில் குப்பை கொட்டும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.
அதன்போது, மாகாணத்தின் எதிர்கால கழிவு முகாமைத்துவத்துக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் விளக்கமளித்தார்.
பல்வேறு திட்டங்களின் ஊடாக கழிவுகளை வகைப்படுத்தி, முறையான முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது
மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் தமது நியமத் துணைவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய கழிவுகளைத் தரம் பிரித்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.









No comments