Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தை வடக்கு கடல் தொழில் சமூகம் வரவேற்கிறது.


இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால்  வடக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். அந்த பாதிப்பிலிருந்த எங்களுக்கு ஒரு  நிவாரணியாக இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தை பார்க்கிறோம் என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். 

யாழில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் 

இலங்கை - இந்திய கடல் எல்லை தொடர்பாகவும், இந்தியாவில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளோடு  இலங்கைக்கு உரித்தான கச்சத்தீவைத் தாண்டி இந்திய மீனவர்கள் வர கூடாது என்றும், கச்சத்தீவு வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமான தீவு என நாங்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

அந்த வலியுறுத்தலின் அடிப்படையிலே இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம், என்பதனை கூறியுள்ளார். 

இதை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நீதிபதியின் கருத்துக்கு பிற்பாடாவது தமிழ்நாட்டிலே இருக்கின்ற 2,500 இலிருந்து 4,000 வரையான இழுவைமடி தொழிலாளர்கள் இலங்கை கடல் பகுதிக்கு தயவுசெய்து  வராதீர்கள்.

நீதிபதியின் கருத்தை வடக்கு கடல் தொழில் சமூகம் வரவேற்கிறது. 

நாங்கள் ஒரு தீர்வை நோக்கி நகரும் போது தற்போது நம்பிக்கை எழுந்திருக்கின்றது. அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கும், இலங்கை கடற்படைக்கும் இருக்கின்றது. அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கரிசனை எடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் வராமல் தடுக்க வேண்டிய பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். 

அது தொடர்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும் என கோருகிறோம்.

அதேவேளை இதைவிட மிக முக்கியமான பொறுப்பு தமிழ் நாட்டு முதலமைச்சர் கையில் தான் உண்டு. தமிழ்நாட்டு முதலமைச்சர் தான் தமிழ்நாட்டிலே இந்த மீனவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவே  மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய்,  மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக தமிழக மீனவர்களால் வடக்கிலே நாங்கள் பாதிக்கப்பட்டோம். அந்த பாதிப்பிலிருந்த எங்களுக்கு ஒரு  நிவாரணியாக இந்த உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தை பார்க்கிறோம்.

அத்துடன் இனிமேல் இந்த கச்சத்தீவு பிரச்சனையை வைத்து மீனவர் முரண்பாட்டையோ, மீனவர்களுக்கு இடையிலான விரிசலையோ ஏற்படுத்தாது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அதேபோன்று தமிழ்நாட்டிலே இருக்கிற ஊடகங்களும் கடந்த காலங்களிலே தமிழக மீனவர்கள் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டாலும், காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்டாலும், மன்னாரில் கைது செய்யப்பட்டாலும் 'கச்சத்தீவுக்கு அண்மித்த பகுதியிலே மீன்பிடித்த போதுதான் கைது செய்யப்பட்டார்கள்' என செய்தியை வெளியிட்டீர்கள்.

இனியாவது இந்த நீதிமன்றத்தின் கருத்துரைக்கு அமைவாக கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, கச்சத்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்டால் அது இலங்கை கடல் பகுதி என்ற உண்மையான செய்தியை நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என தமிழ்நாட்டிலிருக்கின்ற அத்தனை ஊடகவியலாளரையும் ஊடக நிறுவனங்களையும் நாங்கள் தயவாக கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.


No comments