பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்துள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உலப்பனே சுமங்கல தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகிலுள்ள வளாகம், நடைபாதைகள் மற்றும் எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கன்னங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் ப்ளவர் வீதி உள்ளிட்ட வீதிகளை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்னாலும், விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலையைச் சுற்றியுள்ள பகுதியிலும் தொடர்ந்து தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106(1) பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் 106(3) பிரிவின் பிரகாரம் குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்படுவது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 185 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.









No comments