நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கைக்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதுடன், தற்போது படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சூழ இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயம் (ITCZ) காணப்படுவதால், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது
குறிப்பாக, சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருவதுடன், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழையுடனான வானிலை நீடிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயத்தின் செல்வாக்கு காரணமாக அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசமொன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வானிலை அமைப்பினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், இலங்கை ஊடாகக் காற்றோட்டம் நிலவுவதால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடரக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் குறைந்த அழுத்த நிலைமை மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுப்பதற்கான சாத்தியமும் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள், குறிப்பாக பலநாள் மீன்பிடிப் படகுகளை இயக்குபவர்கள், மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.









No comments