இலங்கையை பத்தாண்டு காலமாகச் சீரழித்த இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளிலிருந்து மீட்டு, நாட்டின் எதிர்காலத்தை ஊழலற்றதாக மாற்றியமைக்க வேண்டிய வரலாற்று ரீதியான கடப்பாடும் பொறுப்பும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உண்டு என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் மற்றும் இலஞ்சம் என்ற சொற்களை எடுத்துக்கொண்டால், அவை ஏதோ ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது இலங்கையில் வாழுகின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய இனங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மாத்திரமோ சொந்தமானவை அல்ல. இவை ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரித்தான, ஒட்டுமொத்தத் தேசத்தையும் பாதித்துள்ள பேராபத்தாகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கசடு நிறைந்த, சுயநல அரசியலினாலும் ஊழல் மோசடிகளினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது இந்த நாட்டில் வாழும் சாதாரண பொதுமக்கள் மட்டுமே. நாட்டின் இந்த அவல நிலையை உணர்ந்தே, ஊழலில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் உன்னத நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தியானது 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே தனது உத்தியோகபூர்வ கொள்கைப் பிரகடனத்தில் இது குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. நாட்டில் ஊழலின் பரிமாணம் எவ்வாறு உள்ளது, அதிலிருந்து தேசத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கான தெளிவான வழிகாட்டலை நாங்கள் மக்களுக்கு வழங்கியிருந்தோம்.
இன்றைக்குச் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கடந்த காலங்களில் பலதரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்த போதிலும், தற்போதைய சூழலில் 'ஊழல்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எதிர்க்கட்சியினர் மிகுந்த அச்சமும் பயமும் கொண்டவர்களாக மாறியுள்ளனர். அந்தப் பயத்தின் வெளிப்பாடு எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், கடந்த காலத்தில் நாட்டில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் காரணகர்த்தாக்கள் வேறு யாருமல்ல, தேசிய மக்கள் சக்தியினர்தான் எனக் கூறும் அளவுக்கு எதிர்க்கட்சி அரசியல் இன்றைக்கு மிகவும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விவகாரம் குறித்து சபையில் மிக ஆக்ரோஷமாகப் பேசி வருகின்றார்கள். ஆனால், அவர்களின் வரலாற்றுப் பின்னணியையும், நபிகள் நாயகத்தின் உயரிய போதனைகளையும் நாம் உற்றுநோக்கினால், ஊழல் மற்றும் திருட்டில் ஈடுபடுபவர்களுக்குக் கைகளை வெட்டுவது போன்ற மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறும் நபர்கள், இன்றைக்கு ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பேசுவது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும்.
எதிர்வரும் காலங்களில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ள இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம், கடந்த காலங்களில் நாட்டைக் சூறையாடிய ஊழல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராகச் சிறைச்சாலையை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தின் மூலம் நாட்டில் மிகப்பெரிய நேர்மறை மாற்றமும் ஊழலெதிர்ப்பு நடவடிக்கைகளும் முழுமையாக வெற்றிபெறும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
இதேவேளை, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நபர்களால் கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடமிருந்து பெற்று இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பரப்பு இலங்கைகே முழுமையாகச் சொந்தமானது' எனத் தெளிவாகத் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்துக்கு இச்சபையின் வாயிலாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இந்திய இழுவைமடிப் படகுகள் எல்லை தாண்டி இலங்கைக்கடலுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்துப் பேசிய அந்நாட்டு நீதிமன்றம், இலங்கைக்கடல் பரப்பு மிகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. மாறாக, தமிழ்நாட்டின் கடல் பரப்பு அசுத்தமடைந்து, மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறியுள்ளதாகவும், அதன் காரணமாகவே இந்தியப் படகுகள் இங்கு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, சுத்தமாக உள்ள இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியப் படகுகள் அத்துமீறக் கூடாது என இந்திய நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நாங்கள் முழுமையாக வரவேற்கின்றோம் என்றார்









No comments