வடக்கு மாகாணத்தின் 10 உள்ளூராட்சி மன்றங்களின் வீதி அபிவிருத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், மோட்டார் கிரேடர் இயந்திரங்கள் எதிர்வரும் 04ஆம் திகதி வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த இயந்திரங்களை வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் அடிப்படையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, அவற்றின் சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்து வரும் செயற்றிட்டங்களில் ஒன்றாக இந்த இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 75 மோட்டார் கிரேடர் இயந்திரங்களில் 10 இயந்திரங்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை, மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபை மற்றும் வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபை ஆகியவற்றுக்கு இவ்வியந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
மோட்டார் கிரேடர் இயந்திரங்கள் கிடைப்பதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள கிராமிய வீதிகளைச் சீரமைத்தல், வீதிப் பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளைத் தமது வளங்களைக் கொண்டே முன்னெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால், உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை மேலும் வினைத்திறனுடன் வழங்குவதற்கும், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த இயந்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த ஜனாதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.









No comments