தனது திருமணத்தை வெகு விமர்சையாக செய்வதற்கு தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஹேரத் முதியன்சலாகே பராக்கிரம பண்டார ஜயலத் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். அவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது தந்தையான 65 வயதுடைய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் ரிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த இளைஞனின் திருமணம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருந்தது. இளைஞன் தான் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்ய விரும்பியதால் , இளைஞனின் பெற்றோர் அந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
அதனால் குறித்த இளைஞன் தனது திருமண செலவுக்கு பணம் தருமாறு தந்தையை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததுடன் , வீட்டில் தினமும் சண்டை சச்சரவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இளைஞன் வீட்டில் கட்டிலில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவேளை , இளைஞனின் தந்தை இளைஞனை கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.
மகனை படுகொலை செய்த தந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
No comments