யாழ்ப்பாணம் வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 2400 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் 36 வருடங்களாக அடாத்தாக கையகப்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வலிகாமம் வடக்கில் , விவசாயம் மற்றும் கடற்தொழில் என செழிப்பு மிக்க 19 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது
இதில் மூன்று கிராம சேவையாளர் பிரிவு முற்றாகவும் , ஏனைய 16 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியளவிலும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது
பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு மற்றும் மயிலிட்டி துறை தெற்கு ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டியுள்ளது
மயிலிட்டி வடக்கு , மயிலிட்டி துறை தெற்கு மற்றும் மயிலிட்டி துறை வடக்கு ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவை கொண்ட மக்களே இலங்கையின் மீன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு மீன் உற்பத்தியை வழங்கிய மக்கள் இன்று அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு 36 வருடங்கள் கடந்தும் மீள் குடியேற்றப்படவில்லை
இந்த மக்களை மீள் குடியேற்றுவோம் என கூறி மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இவர்களை மீள் குடியேற்றவில்லை. மக்களின் காணி மக்களுக்கே என கூறி வந்த இந்த அரசாங்கம் , ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் நிறைவடைந்ததும் பலாலி வீதியை நேர கட்டுப்பாட்டுடன் திறந்து விட்டதை தவிர வேறு எதனையும் செய்யவில்லை
பலாலி வீதியில் கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , விமான நிலைய விஸ்தரிப்பிப்புக்கு என காணியை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்
உண்மையில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு பலாலி கிழக்கு பகுதி காணிகள் தேவையில்லை.
ஆட்சிக்கு வருவதற்காக மக்களிடம் , மக்களின் காணி மக்களுக்கு என கூறி ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்தும் , இதுவரையில் மக்கள் பொறுமையாக தமது காணிகளை விடுவிப்பார்கள் என காத்திருந்தார்கள். ஆனால் இன்னமும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை
அண்மையில் , காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இப்பகுதிக்கு வந்திருந்த போது , காணிகள் தொடர்பிலான விபரங்கள் தெரிந்தவர்களை அழைக்கவில்லை. சாக்கு போக்காக ஆளுநர் அலுவலகத்தில் கூட்டத்தினை நடாத்தி விட்டு, காணிகளை விடுவிப்போம் என கூறி சென்றுள்ளனர்
எனவே , மக்களை தொடர்ந்து ஏமாற்றாது , இப்பகுதி மக்களுக்கு சொந்தமான சுமார் 2400 ஏக்கர் காணிகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் அரச காணிகள் எதுவும் இல்லை. இவ்வளவும் மக்களுக்கு சொந்தமான உறுதி காணிகள். அவற்றில் தான் இராணுவம் தோட்டம் செய்தும் , கடைகளை நடாத்தியும் வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளனர். ஆனால் காணி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்படுகிறனர்
எனவே அநுர அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி , மக்களின் காணிகளை மக்களிடமே கையளிக்க வேண்டும் என்பதுடன் , மக்களின் வழிபாட்டு இடங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.





.jpeg)



No comments